Thursday 24 March 2011

வாழ்த்துக்களில் சிறந்தது – அஸ்ஸலாமு அலைக்கும்!



ஆங்கில மொழியின் மீதான பற்று ஆங்கிலேயருக்கு இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக தமிழ் சமுதாயத்தினருக்கு இருக்கிறது. அதிலும் குறிப்பாக வெகு நீண்ட காலம் இந்திய வரலாற்றில் கல்வியில் பின் தங்கி அடிமட்ட வேலைகளில் மட்டும் வாய்ப்பளிக்கப்பட்டு வந்த தமிழ் முஸ்லிம் சமுதாயம், மிக சமீபத்தில் தான் சிந்தனை ரீதியில் சற்றே துயில் கலைந்து எழுந்திருந்து எதிர்கால இளைய சமுதாயத்திற்கு சிறிதேனும் கல்வி கற்க அளிக்கும் மோகம் ஏற்பட்டுள்ளது.
இஸ்லாமிய அடிப்படை அறிவைப் புறந்தள்ளி ஆங்கில மோகம் மேலிட, தம் சந்ததியரைப் பார்த்து பிறர் பாராட்டவேண்டும், வியக்க வேண்டும், பெருமை பேச வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி தமது சந்ததிகள் ஆங்கிலத்தில் புலமை பெற்றிட இரவு பகலாக பெற்றோர்கள் சிந்தித்து வருகின்றனர். இந்த ஆங்கில மோகத்தின் வெளிப்பாடுகள் நம் சமூகப்பிணைப்பிற்குள் இங்கும் அங்குமாக ஏன் நம் குடும்பத்திற்குள்ளாகவே வெளிப்படுவதைக் கூர்ந்து கவனித்தால் நன்கு புலப்படும்.

குறிப்பாக குடும்ப உறுப்பினர்களுக்குள்ளோ, அல்லது நெருங்கிய சொந்தபந்தங்களுக்குள்ளோ கூட ஒருவரை ஒருவர் சந்திக்கையில், உரையாடல் தொடங்குகையில் பரவலாகக் கூறப்படும் குட்மார்னிங், ஹாய், என்று துவங்கி பிரிவில் பை-பை, ஸீ-யூ, என்று மேற்கத்தியக் கலாச்சாரத்தில் எப்போதோ கண்டவற்றை அச்சுப்பிசகாமல் பயன்படுத்தும் அவல நிலையையே எங்கும் காண முடிகிறது.
சமீபத்தில் நிரூபிக்கப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வின்படி, மூன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே தான் யார், தனது பெற்றோர் யார் என்ற நினைவு பிற்காலத்தில் நினைவில் நிற்கும் என்றும் அதற்கு முன் நடைபெற்ற சம்பவங்களும் உரையாடல் முயற்சிகளும் மூளையில் இருந்து அழிந்து போகும் என்றும் அதற்குக் காரணம் எண்ணங்களின் பரிமாற்றம் தெளிவாக அர்த்த்தைத் தரும் மொழியின் மூலம் நடைபெறும் சிந்தனைப் பரிமாற்றம் தான் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இனி ஒருவரை ஒருவர் சந்திக்கையில் முகமன் கூறுவது பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம். இஸ்லாம் ஒரு சக சகோதரரை சந்திக்க/உரையாட நேர்ந்தால் “அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ” என்று கூறுங்கள் என்று அறிவுறுத்துகிறது. இதற்கு “தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!” என்கிற அழகான பொருள் பொதிந்திருக்கும் வாழ்த்தைக் காணலாம்.
இது இவ்வுலகில் உள்ள அனைத்து நாட்டினர் தற்போது கடைபிடித்து வரும் வாழ்த்து முறைகள், வழிமுறை செயல்களாகிய உண்மைக்கு புறம்பான வாழ்த்துக்களையும் விட சிறந்த ஒன்றாகும். “ஆயிரம் ஆண்டுகள் வாழ (வேண்டும் என்று) வாழ்த்துகிறேன்” என்பதோ “குட்மார்னிங் – காலை வணக்கம்” என்பதோ அல்லது ஒருவர் மற்றவருக்கு சிரம் பணிவதோ, அப்பொருளுடைய வார்த்தைகள் கூறிக் கொள்வதோ சரியான ஒன்றாகாது.
‘ஸலாம்’ எனும் வார்த்தை ‘ஸலெம’ எனும் மூல வார்த்தையிலிருந்து வருகிறது. இதற்கு, தீய மற்றும் கேடானவற்றை விட்டு ஒருவர் தன்னை வேறுபடுத்திக் கொள்வது என்று பொருள் வரும். ஆக, நாம் ஒருவரை மற்றொருவர் வாழ்த்தும் போது, “உனக்கு எவ்வித தீங்குகளும் என்புறத்திலிருந்து வராது; உனக்கு எந்த கேடானதும் வரக்கூடாது; உனக்கு எந்த தீங்கும் ஏற்படக்கூடாது;” என்ற பிரார்த்தனையாக இது மாறுகிறது.
அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் சில நபித்தோழர்களுடன் அமர்ந்திருந்த இடத்தை கடந்த ஒரு மனிதர் அவர்களுடன் அமரும் போது, “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று  கூறினார்.(அப்பொழுது) நபி(ஸல்) அவர்கள், (அவர் பெற்று கொள்வது உறுதி) ”பத்து ஹஸனாத் ”(பத்து நன்மைகள்) என்று கூறினார்கள். அடுத்தொருவர் வந்தார். அவர், “அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்” (உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும்) என்று கூறி அமர்ந்தார். நபி(ஸல்), அவர்கள் கூறினார்கள்:(அவர் பெற்று கொள்வது உறுதி) ‘ இருபது ஹஸனாத்’(இருபது நன்மைகள்). மூன்றாவதாக ஒருவர் வந்தார். அவர், “அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு”(உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் அருளும் உண்டாகட்டும்) என்று கூறிவிட்டு அமர்ந்தார். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அவர் பெற்று கொள்வது உறுதி) ‘ முப்பது ஹஸனாத்’(முப்பது நன்மைகள்).
“நீங்கள் (இறை)நம்பிக்கை கொள்ளாதவரை சுவனத்தில் செல்ல முடியாது. மேலும் நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (இறை)நம்பிக்கை கொள்ளமுடியாது. நான் உங்கள் மத்தியில் நேசம் ஏற்படுத்தும் ஒன்றை உங்களுக்கு அறிவிக்கட்டுமா?. உங்களுக்கு மத்தியில் ஸலாம் (சாந்தியான வாழ்த்தை கூறிக்கொள்ளும் வழக்கத்தை) பரப்புங்கள்”.
“பின்னர், எவர் தமது இறைவனுக்கு அஞ்சி(வாழ்ந்த)னரோ அவர்கள் கூட்டமாக சுவர்க்கத்தில் செலுத்தப்படுவர். அவர்கள் அதை நெருங்கும் போது அதன் வாசல்கள் திறக்கப்படும். மேலும் அதன் காவலர்கள் அவர்களை நோக்கி “ஸலாமுன் அலைக்கும்” (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று கூறுவார்கள். நீங்கள் நல்லதை செய்ததன் காரணமாக இதில் நுழைந்து அதில் என்றென்றும் நிலையாக தங்கி விடுங்கள்”(ஸூரத்துல் ஜுமர் : 73 )
மேலும் அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்வே “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று தன் அடியார்களைப் பார்த்து முகமன் கூறுகிறான்.
ஜிப்ரீல்(அலை) அவர்கள், “அல்லாஹ் கதீஜா(ரலி) அவர்களுக்கு ஸலாம் அனுப்பியுள்ளான்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், “ஓ! கதீஜாவே, அல்லாஹ் உமக்கு ஸலாம்(கூறி)அனுப்பியுள்ளான்”. அதற்கு அன்னை கதீஜா (ரலி) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வே ‘அஸ் ஸலாம்’ ஆவான். மேலும் உங்கள் மீதும் (ஜிப்ரீல்(அலை)) ஸலாம்(சாந்தி) உண்டாகட்டும்); மேலும் அல்லாஹ்வின் தூதரே, தங்கள் மீதும் ஸலாம் (சாந்தி) உண்டாகட்டும்”. (ஹதீஸ்: புகாரி)

No comments:

Post a Comment