Wednesday 23 March 2011

பி.எஸ்.என்.எல். வரமா? சாபமா?


Wednesday, March 23, 2011 3:41 PM ISTகட்டுரைகள்


First Published : 19 Mar 2011 03:43:01 AM IST


நாட்டின் நட்சத்திர அந்தஸ்து பெற்ற நிறுவனங்களுள் ஒன்றான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சில அதிகாரிகள் செய்யும் தொடர் அலட்சியத்தால் அந்நிறுவன சேவையில் இருந்து வேறு நிறுவனங்களின் சேவைக்கு மாறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
 தொலைபேசித்துறையில் தனியார் நிறுவனங்கள் நுழைவதற்கு முன் பி.எஸ்.என்.எல். நிறுவனம் மட்டும் கோலோச்சிக் கொண்டிருந்தது. அப்போது இத்துறை அசுர வளர்ச்சியடையவில்லை.
 இந்திய அரசியலில் ராஜீவ் காந்தி நுழைந்ததற்குப் பின் நாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய புரட்சியில் தொலைபேசித்துறையின் தொழில்நுட்பம் அதிக அளவில் இருந்தது எனலாம்.
 கடந்த சில ஆண்டுகளாகத் தொலைபேசித்துறையில் தனியாரும் நுழைந்துள்ளனர். இதனால் மிகக் கடுமையான போட்டி ஏற்பட்டது. தனியார் நிறுவனங்கள் உடனடியாக முடிவெடுத்து வாடிக்கையாளர்களைக் கவர்வதால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தரைவழித் தொலைபேசி பெற்றிருந்த பலரும் அதைத் திரும்ப ஒப்படைத்தனர். இதனால் அந்நிறுவனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டது.
 இந்நிலையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் செல்போன் சேவையைத் தொடங்கியது. ஏற்கெனவே அடிப்படை வசதிகள் மிகக் கூடுமான அளவில் இருந்ததால், பட்டி தொட்டியெங்கும் செல்ஒன் நிறுவன செல்போன்கள் ஒலிக்கத் தொடங்கின.
 அரசியல்வாதிகளும் பி.எஸ்.என்.எல். நிறுவன அதிகாரிகளும் இணைந்து செயல்படத் தொடங்கியதன் விளைவு, ஒரு நல்ல நிறுவனத்தை நாசப்படுத்தும் செயல் தீவிரமடையத் தொடங்கியது. பி.எஸ்.என்.எல். நிறுவன அதிகாரிகள் பலர் தூண்டிலில் சிக்கிய மீனைப்போல, தனியார் நிறுவனங்களின் பிடியில் சிக்கினர். இதனால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்குப் பல கோடி நஷ்டம் ஏற்பட்டது.
 இந்நிலையில், நிறுவனமாக மாறி ஆட்டம் கண்டுபோயுள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மேலும் நலிவடையச் செய்யும் முயற்சியாகப் பல அதிகாரிகளும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
 இப்போதும், தரைவழித் தொலைபேசி வாங்கவேண்டுமென்றாலும் அலைந்து திரிய வேண்டியுள்ளது. குறிப்பிட்ட எண் வேண்டுமென்றாலும் அதிகாரிகளிடம் கேட்டுக் கேட்டுப் போராட வேண்டிய நிலை உள்ளது. இதனால்தான் பலரும் தனியார் நிறுவனங்களை நாடி வருவது கண்கூடு. பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையத்தில் உள்ளோரிடம் சென்றால் எந்த நேரத்திலும் உரிய பதில் கிடைப்பதில்லை.
 மனசாட்சியுள்ள ஒரு சில நல்ல அதிகாரிகள் இந்நிறுவனத்தில் வேலை செய்வதை மறுப்பதற்கில்லை. ஆனால், அவர்களையும் உயர் அதிகாரிகள் மதிப்பதில்லை என்று குமுறுகிறார் பொறியாளர் ஒருவர். இதே நிலைதான் செல்போன் சேவைகளுக்கும்.
 குழுவாக அதிக இணைப்புப் பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கான திட்டங்களுக்கு எந்த உயர் அதிகாரியும் ஒப்புதலை உடனடியாகத் தருவதில்லை. இதற்கான அனுமதியை தில்லியில் பெறவேண்டும் என்கின்றனர். இதனால் ஏற்படும் காலதாமதத்தால் தனியார் நிறுவனங்களுக்குத் தாவும் வாடிக்கையாளர்கள் அதிகம்.
 "பிரிபெய்டு' அல்லது "போஸ்ட் பெய்டு' எந்தத்திட்டமாக இருந்தாலும் புத்தாண்டு, காதலர் தினம் உள்ளிட்ட முக்கிய நாள்களில் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனம் கட்டணம் வசூலிக்கிறது. மாதத்துக்கு இத்தனை குறுஞ்செய்திகள் இலவசம் என்றாலும், குறிப்பிட்ட நாள்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
 ஒரு மாதத்துக்குக் குறைந்த கட்டணத்தில் பேசிக்கொள்ளலாம் என்றாலும் குறிப்பிட்ட நாள்களில் கட்டாயமாக்கப்படுகிறது.
 இதுதொடர்பாக தனியார் தொலைபேசி நிறுவனங்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் புகார் செய்துள்ளதால்தான் இந்தப் பிரச்னை என்கின்றனர் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள். இதுபோல தனியார் நிறுவனங்கள் செய்யும் பிரச்னைகளை பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.
 பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் உள்ளது போன்ற கட்டமைப்பு வசதிகள் வேறு எந்த நிறுவனத்திலும் இல்லை. அரசியல்வாதிகளின் ஆசி காரணமாகத்தான் தனியார் நிறுவனங்கள் வளர முடிகிறது. இன்றும் கிராமப்புறங்களிலும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் மட்டும்தான் சேவையாற்றி வருகிறது. பில்லில் வெளிப்படையான தன்மை இதைப்போல வேறு நிறுவனங்களில் இல்லை.
 தனியார் நிறுவனங்களைப்போல அதிகாரத்தைப் பரவலாக்கி மாநிலத்துக்கு மாநிலம் போட்டிக்குத் தகுந்தாற்போல சில உடனடி முடிவுகளை மேற்கொண்டு வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும். ஒவ்வொரு முடிவுக்கும் தில்லியை எதிர்பார்த்துக் காத்திருக்காமல் ஆங்காங்கு அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும். இல்லாவிட்டால், பி.எஸ்.என்.எல். என்ற நிறுவனம் இந்தியாவில் இருந்தது என்றுதான் அடுத்த தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் சூழ்நிலை வெகு தொலைவில் இல்லை.
 ஒரு காலத்தில் பணக்காரர்கள் மட்டும் வைத்திருந்த பகட்டு என்று கருதப்பட்ட தொலைபேசி, இப்போது மிகவும் அத்தியாவசியம் என்றாகிவிட்டது. ஆனாலும் அதிக சகிப்புத்தன்மையுடன் பி.எஸ்.என்.எல். நிறுவன தொலைபேசி, செல்ஒன் இணைப்பை இப்போதும் வைத்திருப்பது வரமா, சாபமா?
 

No comments:

Post a Comment