Thursday 31 March 2011

தேர்வு -பெற்றோருக்கு அறிவுரைகள் !


பெற்றோருக்கு அறிவுரைகள்

1. தேர்வு என்றவுடனேயே மாணவர்களை பீதிக்குள்ளாக்கி அச்சுறுத்தும் நிலையைத்தான் நாடெங்கும் பார்க்கிறோம். தேர்வில் வெற்றி பெறுவதுதான் ஒரு மாணவனின் ஒட்டுமொத்த இலட்சியம் என்பதுபோன்ற ஒரு மாயை ஏற்படுத்தப் பட்டுள்ளது. நிச்சயமாக மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறத்தான் வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை, ஆயினும் அல்லாஹ்விடம் தவக்குல், மற்றும் ஈமானிய நிலை இதன்மூலம் மறக்கடிக்கப்படும் சூழ்நிலை உருவாகிறது. பெற்றோர்களே! மறுமையில் வெற்றிபெறுவதைத்தான் ஒவ்வொரு முஸ்லிம் மாணவ மாணவியர்களின் முதல் குறிக்கோளாக போதிக்கப்படுவேண்டும். முஸ்லிம் மாணவர்களுக்கு இதைத்தான் முதல் இலட்சியமாக மனதில் பதிய வைக்கப்படவேண்டும். இவ்வுலக கல்விகளின் தேர்வுகள் அதை ஒப்பிடும்போது இரண்டாம் நிலையில்தான் வைக்கப்பட வேண்டும்.

2. மாணவர்கள் அரசுத் தேர்வில் வெற்றிபெற தவறிவிட்டாலோ அல்லது குறைந்த மதிப்பெண் எடுத்துவிட்டாலோ அவர்களின் பெற்றோர்கள் கடுமையாக திட்டித் தீர்ப்பதை நாம் பார்க்கிறோம். இதனால் தோல்வியுற்ற மாணவர்கள் கடும் சோர்வடைந்து, மனமுடைந்து இறுதியில் தற்கொலைக்குச் செல்கிறார்கள். அதைவிடுத்து குறைந்த மதிப்பெண் எடுப்பதற்கு என்ன காரணம் என்று ஆராயுங்கள். அந்த குறைகளை களைய முற்படுங்கள்.

3. அன்பின் பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளை அவர்களின் சக நண்பர்களோடு ஒப்பிட்டு குத்திக் காட்டி பேசாதீர்கள். 'நீ என்ன மார்க்கெடுத்து கிழிச்சிருக்கிறாய், அதோ அந்த பிள்ளைய பாரு' என்ற வார்த்தைகள் உங்கள் பிள்ளைகளை தாழ்வுமனப்பான்மையை நோக்கி இட்டுச் செல்லும். இறுதியில் அந்த நண்பரை வெறுக்கும் நிலைக்கு கொண்டு சேர்க்கும். 

4. மாறாக உங்கள் பிள்ளைகளை உற்சாகப் படுத்துங்கள். அவர்களுக்கு தோழோடு தோழ்நின்று உதவுங்கள். விடியற்காலையில் எழுந்து படி என்று சொல்வதற்குப் பதிலாக நீங்கள் தஹஜ்ஜத் வேலையில் எழுந்து பிள்ளைகளையும் தொழுமாறு ஏவி அவர்களுக்காக தேநீர் போன்ற பானங்களை தயாரித்து கொடுத்துவிட்டு 'பார்த்தாயா நீ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுப்பதற்காகவே உன்னோடு நானும் இந்த அதிகாலையில் விழித்திருக்கிறேன்' என்று சொல்லிப் பாருங்கள். உங்கள் பிள்ளைகள் அடையும் உற்சாகம் ஒருபக்கம் இருக்கட்டும் அல்லலாஹ்வின் அளப்பெரும் அருள் உங்கள்மீது இறங்கும், இதைவிட வேறு என்ன வேண்டும்.

No comments:

Post a Comment