Wednesday 23 March 2011

கிரைண்டருக்கு மின்சாரம் கிடைக்குமா? திமுக வேட்பாளரை திணறடித்தனர்


Wednesday, March 23, 2011 3:01 PM IST
கிரைண்டருக்கு மின்சாரம் கிடைக்குமா? திமுக வேட்பாளரை திணறடித்தனர்

First Published : 23 Mar 2011 04:43:44 AM IST

Last Updated : 23 Mar 2011 05:52:14 AM IST

திருமங்கலம், மார்ச் 22: கிரைண்டர் வழங்கினால் அதற்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படுமா என மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் தி.மு.க. வேட்பாளரிடம் கிராம மக்கள் கேள்வியெழுப்பியதால் பிரசாரம் செய்ய வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 திருமங்கலம் தொகுதி தி.மு.க. வேட்பாளராக மணிமாறன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
 இத்தொகுதியில் தி.மு.க., அதன் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் பிரசாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 தி.மு.க. வேட்பாளர் மணிமாறன், முன்னாள் சட்டப் பேரவைத் தலைவர் சேடபட்டி முத்தையா உள்ளிட்டோர் திருமங்கலம் நகர் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
 செங்குளம், உச்சப்பட்டி, தர்மத்துப்பட்டி, மறவன்குளம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் நடைபெற்றது.
 உச்சப்பட்டியில் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்த தி.மு.க.வினர், அங்கு திரண்டிருந்த பெண்களிடம் தி.மு.க. வெற்றிபெற்றால் கிரைண்டர், மிக்சி வழங்குவோம் எனத் தெரிவித்தனர்.
 உடனே கிராமப் பெண்கள், "கடந்த தேர்தலில் தாங்கள் அறிவித்தபடி இலவச காஸ் அடுப்பு, 2 ஏக்கர் நிலம் இன்னமும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. தாங்கள் வழங்கிய இலவச கலர் டி.வி.யும் பழுதடைந்து முடங்கிக் கிடக்கிறது.
 எங்கள் பகுதிக்கு மின்சாரமும் ஒழுங்காக வருவதில்லை. இந்நிலையில், கிரைண்டர் தருவதாகக் கூறுகிறீர்களே.. அதற்கு மின்சாரம் கிடைக்குமா?' என சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.
 இதனால் அதிர்ச்சியடைந்த பிரசாரக் குழுவினர், ஒருவழியாக அவர்களைச் சமாளித்து அங்கிருந்து வெளியேறினர்.
 பிரசாரத்தைத் தொடங்கியுள்ள நிலையில், மின்சாரப் பிரச்னை "ஷாக்' அடிக்கத் தொடங்கியுள்ளதால் தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment