Friday 25 March 2011

விலைவாசி உயர்வால் விழிபிதுங்கும் சிறுதொழில் ?




First Published : 25 Mar 2011 02:50:08 AM IST


விலைவாசி உயர்வு உலக அளவில் மிகப்பெரிய தடுமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. எகிப்திலும், டுனீசியாவிலும் ஆட்சி மாற்றத்துக்கான மக்கள் போராட்டத்துக்கு விலைவாசி உயர்வும் ஒரு காரணம்.
 இந்தியாவைப் பொறுத்தமட்டில், அடித்தட்டு மக்கள் உணவுப் பொருள்களுக்கும், தங்குமிடத்துக்கும் ஏற்படுகிற செலவைச் சமாளிக்க முடியாமல் சொல்லொணாத் துன்பத்துக்குள்ளாகி வருகின்றனர். இப்படி அடித்தட்டு மக்களையும் வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வால் அவற்றை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்காவது லாபம் உண்மையில் கிடைக்குமென்றால் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். நமக்கும் ஆறுதலாக இருந்திருக்கும். ஆனால், விவசாயிகளுக்கு அவர்களின் வேளாண் பொருள்களுக்குச் சரியான விலை கிடைக்கவில்லை. இடைத்தரகர்கள், பதுக்கல்காரர்கள் மட்டுமே பலன் அடைகின்றனர்.
 இப்படி அடித்தட்டு மக்களையும், விவசாயிகளையும் வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வால் சிறுதொழில்களும் கிட்டத்தட்ட சமமான அளவுக்கு அவதிப்படுகின்றன.
 நேரடிப் பாதிப்பு: சிறுதொழில் முனைவோர் பெரிய நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் உற்பத்தி செய்து தருகின்றனர். ஒரு சிலர் நுகர்வுக்குத் தயாராக உள்ள முழுமையான பொருள்களாகத் தயாரித்துச் சந்தைப்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு வேண்டிய அத்தியாவசியமான மூலப்பொருள்கள் இரும்பு, அலுமினியம், காப்பர் (தாமிரம்), துத்தநாகம் போன்றவைகளாகும். இந்தியாவில் இந்த மூலப்பொருள்களைத் தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள் ஒற்றைப்படை எண்ணிலேயே உள்ளன.
 இரும்புப் பொருள்களை எடுத்துக்கொண்டால் அரசு நிறுவனங்களான "செயில்', ஆர்.எஸ்.என்.எல்., டாடா, ஜிண்டால், எஸ்ஸôர் ஸ்டீல் போன்றவைகளாகும்.
 அலுமினியத்தை எடுத்துக்கொண்டால் அரசு நிறுவனமான நால்கோ, வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமான மால்கோ, பால்கோ மற்றும் இண்டால்கோ, ஹிண்டால்கோ ஆகிய ஐந்து நிறுவனங்களில் மூன்று தனியார் உரிமையாளர்களால் நடத்தப்படுகின்றன.
 தாமிரத்தை எடுத்துக்கொண்டால் ஸ்டெர்லைட், இந்துஸ்தான் காப்பர், பிர்லா குழுமம் ஆகிய மூன்று நிறுவனங்கள்தான் உற்பத்தி செய்து வருகின்றன.
 அதேபோல், துத்தநாகத்தைப் பொறுத்தமட்டில் இரண்டே இரண்டு நிறுவனங்கள்தான் உற்பத்தி செய்கின்றன. இரும்பு பொருள்களின் விலையை முன்பு அரசு கட்டுப்படுத்தி வந்தது. அரசுக் கூட்டுக் கமிட்டியின் முன் அனுமதி பெற்றே விலையை உயர்த்த வேண்டும். ஆனால், இன்று எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் நினைத்த பொழுதெல்லாம் உற்பத்தியாளர்கள் விலையைக் கூட்ட அரசு அனுமதித்துவிட்டது.
 அலுமினியம், காப்பர், துத்தநாகம், டின் போன்ற மூலப்பொருள்களின் விலையை லண்டன் உலோக அமைப்பு விலையின் அடிப்படையில் நிர்ணயிக்கின்றனர். குறிப்பாக, காப்பர் ஒவ்வொரு நாளும் ஒரு விலை என்பதால் சிறுதொழில் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
 கடந்த 2010 ஜூலை முதல் 2011 பிப்ரவரி வரை அலுமினியம் 31 சதவீதமும், காப்பர் 55 சதவீதமும், ஈயம் 55 சதவீதமும், துத்தநாகம் 39 சதவீதமும், இரும்பு 25 முதல் 30 சதவீதமும் விலை உயர்ந்துள்ளன.
 அலுமினியம் மற்றும் இரும்பு ஆகிய இரண்டும் இந்தியாவில் கிட்டத்தட்ட தேவைக்குப் போதுமான அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவைகளுக்குத் தேவையான மூலப்பொருள்கள் இந்திய மண்ணிலேயே தோண்டி எடுக்கப்படுகின்றன. அதற்கான குத்தகைத் தொகை அல்லது ராயல்டி தினசரி மாறுவதில்லை.
 அதேபோல், தேவையான மின்சாரத்துக்கும் அதற்குரிய கட்டணமும் அடிக்கடி மாறுவதில்லை. தொழிலாளர் கூலியும் நாள்தோறும் மாறுவதில்லை. ஆகையால், அலுமினியம் மற்றும் இரும்பு விலைகளை அடிக்கடி உயர்த்துவதற்கு எந்தவித நியாயமான காரணமும் கிடையாது. இவைகளின் அடாவடி விலையேற்றத்துக்கு ஒரே காரணம், இரும்பு நிறுவனங்களின் பேராசை. இரண்டாவதாக, அந்தப் பேராசையைக் கட்டுப்படுத்துவதற்குக் கூட்டுக் கமிட்டி போன்ற அரசாங்கத்தின் எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
 வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் பொருள்களின் விலையை நினைத்த நேரத்தில் கூட்ட முடிகிறது (அத்தகைய பெரிய நிறுவனங்களும் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன). ஆனால், அவர்களுக்கு உதிரி பாகங்களைத் தயாரித்துக் கொடுக்கும் சிறுதொழில் நிறுவனங்களுக்கு அந்தப் பெரிய நிறுவனங்கள் விலை உயர்வை அனுமதிப்பதில்லை. ஆண்டுக்கு ஒருமுறை ஒப்பந்தம் என்று கூறி சிறுதொழில் நிறுவனங்களிடமிருந்து பொருள்களைப் பெறுகின்றனர்.
 பல நேரங்களில் மூலப்பொருள்களின் விலையேற்றத்தைக்காட்டி விலை உயர்வு கேட்டால் சிறுதொழில் நிறுவனங்கள் இழுத்தடிக்கப்படுகின்றன அல்லது அவர்கள் வேறு சிறுதொழில் நிறுவனங்களை நாடிச் சென்று விடுகின்றனர்.
 அதேபோல, பல சிறுதொழில் நிறுவனங்கள் ஒரே முழுமையான நுகர்வுப் பொருளைத் தயாரித்து வருவதாலும், அவர்கள் தங்களது நிறுவனத்தை நடத்த வேண்டிய கட்டாயத்தினாலும் உற்பத்திச் செலவுக்கும் குறைவான விலைக்கு விற்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இதனால் அவர்களும் நஷ்டமடைகின்றனர்.
 மின்வாரியம் போன்ற நிறுவனங்கள் சில பொருள்களுக்கு மட்டும் மூலப்பொருள்களின் விலைக்கேற்ற வகையில் கூட்டுவதற்கு அனுமதி தருகின்றன. அதுவும் மூன்று மாதத்துக்கு ஒருமுறை என்றால் காப்பர், இரும்பு, அலுமினியம் போன்ற பொருள்களின் விலையேற்றத்தை முழுவதும் பெற முடிவதில்லை. மற்ற பொருள்களுக்கு ஒப்பந்த விலை மட்டுமே தரப்படுகிறது.
 மூலப்பொருள்களைப் பெரிய அளவில் ஆறுமாத காலத்துக்காவது வாங்கி வைக்கும் நிதி ஆதாரம் அநேகமாக சிறுதொழில்களுக்கு இல்லையென்றே கூற வேண்டும்.
 ஒரே பொருளைத் தயாரிக்கும் சிறுதொழில் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றுக்குத் தேவையான மூலப்பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அதேபோல சிறுதொழில்களிடமிருந்து உதிரிப் பொருள்களை வாங்கும் பெரிய நிறுவனங்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவு. அதனால் இந்த மூலப்பொருள் உற்பத்தியாளர், இறுதிப் பொருளை வாங்கும் பெரிய நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இடையில் அகப்பட்டு சிறுதொழில் நிறுவனங்கள் கரும்பாகப் பிழியப்படுகின்றன.
 மறைமுகப் பாதிப்பு: சிறுதொழில் நிறுவனங்கள் பெரிய நகரங்களான தொழில் மையங்களுக்கு அருகிலேயே இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இவ்வாறு நகருக்கு அருகில் இருப்பதால் அவை தொழில் கூடங்களுக்குக் கூடுதலாக வாடகை தர வேண்டியுள்ளது. தொழிலாளர்களுக்குக் கூடுதல் ஊதியமும் கூடுதல் போக்குவரத்துச் செலவும் வாங்கிக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளன. இதன் காரணமாக மறைமுகப் பாதிப்பாக சிறுதொழில் நிறுவனங்களின் உற்பத்திச் செலவு தவிர்க்க இயலாமல் உயர்கிறது.
 இதற்கு முடிவுதான் என்ன?
 சிறுதொழிலை வளர்ப்பது அவசியம் என்று அரசுக்கு உண்மையிலேயே எண்ணமிருந்தால் உடனடியாக அவர்கள் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
 இந்தியாவில் தயாராகும் மூலப்பொருள்களுக்கு உரிய விலையை ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இருமுறை அரசின் அனுமதி பெற்றே உயர்த்த வேண்டும். அரசு இதற்கான தனி குழுக்கள், அமைப்புகள் மூலம் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறைதான் வெளிநாட்டிலிருந்து மூலப்பொருள்களின் இறக்குமதிக்கு விலை நிர்ணயம் செய்யும் முறை உள்ளது.
 பெரிய தொழில் நிறுவனங்கள் வழங்கும் கொள்முதல் ஆணைகளில் மூலப்பொருள்களின் விலையேற்றத்துக்கும் பிற காரணங்களின் அடிப்படையிலான விலை உயர்வுக்கும் ஏற்ற வகையில் விலையை இறக்கவும் வகைசெய்யும் நிபந்தனைகள் சேர்க்கப்பட அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
 சிட்கோ, என்எஸ்ஐசி போன்ற நிறுவனங்கள் ஒரே சீரான விலையில் மூலப்பொருள்களை வாங்குவதற்குப் பெரிய அளவில் ஒப்பந்தம் போட்டு சிறுதொழில் நிறுவனங்களுக்கு வழங்கலாம்.
 முன்பு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியமும் குடிசை மாற்று வாரியமும் பெரிய அளவில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டதன் விளைவாக தொழிலாளர்களுக்கு வாடகை வீடுகள் கிடைத்தன. இப்பொழுது அந்த இரண்டு நிறுவனங்களின் பணியில் பெரிய தொய்வு ஏற்பட்டுள்ளது. குறைந்த வாடகையில் தொழிலாளர்களுக்கு வீடுகள் கிடைக்க வழிகாண வேண்டும்.
 போக்குவரத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் காண வேண்டும். மின்வண்டித் தொடரமைப்பு விரைவாக விரிவாக்கப்பட வேண்டும். சிறிய பேருந்து, வேன்கள் குறைந்த தூரத்துக்குப் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி வழங்க வேண்டும்.
நன்றி:
Friday, March 25, 2011 3:53 PM IST

No comments:

Post a Comment