Tuesday 5 April 2011

வெற்றிகரமாக தேர்வு எழுதுவது எப்படி?




First Published : 10 Mar 2011 01:43:36 PM IST

தேர்வு அறையில் நுழைந்தவுடன் உங்கள் எண்களைக் கண்டுபிடித்து உங்கள் இருக்கையில் அமரவும். தேர்வு அறையைச் சுற்றிலும் பார்த்துப் பழக்கப்பட்ட இடமாக மனத்தில் கருத வேண்டும்.
மூச்சுப் பயிற்சியைச் சிறிது நேரம் செய்வதன் மூலம், உடலும் மனமும் அமைதி பெறும். உங்களுக்குத் தேவையான பேனா, பென்சில் போன்ற அனைத்தையும் மேசை மீது வைக்கவும். விடைத்தாளில் உள்ள விதிமுறைகளைப் படிக்கவும்.

வினாத்தாளை படியுங்கள்:
ஒவ்வொரு வினாவையும் படித்து என்ன கேட்கிறார்கள் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு வினாவுக்கும் விடையளிப்பதற்கு முன் அந்த வினாவுக்கான முக்கியக் கருத்துகளை மனத்தில் கொண்டு வந்து ஒழுங்கமைத்துப் பின் அதனை விடைத்தாளில் எழுத வேண்டும்.
விடையளிப்பது:
ஒவ்வொரு வினாவையும் படித்து என்ன கேட்கிறார்களோ அதற்கு மட்டும் விடையளித்தல் வேண்டும்.
ஒவ்வொரு வினாவுக்கும் முழுமையாக விடையளிக்க வேண்டும். பெரிய வினாவுக்கு விடையளிக்கும் போது உங்கள் விடையை முன்னுரை போட்டு எழுத வேண்டும். அந்த முன்னுரையில் நீங்கள் எதைப்பற்றி எழுதப் போகிறீர்கள் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

தெளிவாக இருத்தல்:

நீங்கள் எழுதும் உங்கள் கருத்துகள் தெளிவாக மற்றவர் புரிந்துகொள்ளும்படி இருத்தல் வேண்டும். ஒரே குழப்பமான பதிலாக இருக்கக் கூடாது. எளிய வார்த்தைகளைக் கொண்டு சிறிய வாக்கியங்களில் உங்கள் பதிலை அமைக்கவும்.
உங்கள் கையெழுத்தும் தெளிவாக இருக்க வேண்டும்.

வரைபடங்கள்:

உங்கள் பதில்களில் தேவையான இடங்களில் வரைபடங்கள் வரைந்து உங்கள் கருத்துகளைத் தெளிவாக வெளிப்படுத்தலாம்.

கால மேலாண்மை:

ஒவ்வொரு வினாவுக்கும் எத்தனை நிமிஷம் விடையளிப்பது என்பதைத் தேர்வுக்கு முன்பே முடிவு செய்து கொள்ள வேண்டும்.

தேர்வு அறையில், ஒவ்வொரு மணித்துளியும் நீங்கள் முன்னேறத் திட்டமிட்டபடி செயல்படுத்த வேண்டும்.
ஒரு சில வினாக்களுக்கு அதிக நேரம் செலவு செய்திருப்பின் அதற்கு அடுத்து எழுதும் விடைகளில் அந்த நேரத்தைச் சரிசெய்து கொள்ள வேண்டும்.
தேர்வு முடிவதற்கு 15 நிமிடத்திற்கு முன் நீங்கள் அனைத்தையும் எழுதி முடித்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு விடைக்கும் நடுவே கோடிட்ட பின் முக்கிய தலைப்புகளுக்கும், துணைத் தலைப்புகளுக்கும் தெளிவாக அடிக்கோடிட்டு எழுதவும்.

விடைகளைச் சரிபார்த்தல்:

ஒவ்வொரு விடையையும் விரைவாகப் படித்து அதில் தவறு இருந்தால் சரிசெய்ய வேண்டும்.

நன்கு படிக்கும் பழக்கத்தை உருவாக்க 5 சிறந்த வழிமுறைகள்:

நீங்கள் எதற்காகப் படிக்கிறீர்கள் என்பதைத் தெளிவுப்படுத்திக் கொண்டு, உங்கள் ஆர்வத்தின் அளவை அறிந்தபின் நீங்கள் படிக்கும் பாடம் எவ்வளவு கடுமையானது என்பதையும் உணருங்கள்.
உங்களுக்கு உகந்த படிக்கும் வழிமுறையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் முக்கியக் கருத்துகளை மட்டுமே தெரிந்துகொள்ளப் படித்தால், முக்கியக் கருத்துகளே உங்கள் மனத்தில் நிற்கும்.முக்கியக் கருத்துகளையும், ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டியவற்றையும் முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் படிக்கும்போது குறிப்பு எழுத வேண்டும். முக்கியக் கருத்துகளை உங்கள் சொந்த வார்த்தைகளில் குறிப்பு எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்.

நீங்கள் படித்தபிறகு, ஒருமுறை திரும்ப உங்கள் மனத்தில் படித்தவற்றை நினைவுகூர்ந்து, நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டியவற்றைக் கேள்வி கேட்டுப் பாருங்கள்.

தேர்வு எழுதும் முன் பின்பற்ற வேண்டியவை:
பதற்றம், அச்சம் ஆகியவற்றை நிதானமாய் இருந்து அகற்ற வேண்டும்.

சிலவற்றை நம்மால் நினைவுக்கு அழைக்க முடியாது. அது வராது என்ற எண்ணம் முதலில் கூடாது. முயன்றால் முடியாதது இல்லை. எனவே அச்சத்தைத் தவிர்த்துவிட்டு, இயல்பாக எப்பொழுதும் இருப்பதுபோல் இருக்க வேண்டும். நம்பிக்கையுடன் முழு கவனத்தையும் சக்தியையும் செலுத்தி நாம் நினைவுக்கு கொண்டு வந்தால் கண்டிப்பாக நினைவிற்கு வரும்.

தேர்வு எழுதும்பொழுது பதற்றபடாமல் படித்தவற்றை நிதானமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கருத்துகளை ஒன்றோடொன்று தொடர்புப்படுத்திக் கொண்டு படிப்பது, ஒழுங்காகச் சிந்தித்துப் பார்ப்பது நினைவுக்கழைப்பதற்குப் பெரிதும் உதவும்.

ஒரு வினாவிற்கான விடை நினைவுக்கு வராமல் போனால் அதையே நினைத்துக் கொண்டு அதனுடனே போராடிக் கொண்டு இருக்கக் கூடாது. அந்த நேரத்தில் அதை விட்டு விட்டு மற்ற விடைகளை எழுத வேண்டும். மறந்துபோன விடை பின்பு தானாக நினைவுக்கு வரும். அப்பொழுது எழுதிக் கொள்ளலாம்.

நினைவை மேம்படச் செய்வதற்கான வழிகள்:
கற்க வேண்டும் என்ற உறுதி வேண்டும் ஆர்வமும், கவனமும் வேண்டும் பொருத்தமான மனப்பாடம் செய்யும் முறைகளைக் கையாள வேண்டும் தொடர்புப்படுத்திக் கற்றல் வேண்டும்
தொகுத்தலும், சந்தமும்  (Grouping and Rhythm) உபயோகிக்க வேண்டும். பல புலனுணர்வுகளைப் பயன்படுத்த வேண்டும். சிறந்த சூழ்நிலையில் கற்க வேண்டும்.

போதிய அளவு ஓய்வும் மாற்றமும் வேண்டும்.
திரும்பக் கூறலும் பயிற்சியும் தேவை.
தேர்வுக்கு முழுவதுமாய் தயாராகிவிட்டோம் என்று நீங்கள் உணரும்போது உங்கள் பாடத்திட்டத்தின் கேள்வித்தாளுக்கு (இதுவரை பார்த்திராத) விடைகளைக் குறிப்பிட்ட நேரத்தில் எழுதிப் பார்க்கவும்.

தேர்வு எழுதுவதற்கான வழிமுறைகள்:
முதலில் கேள்வித்தாளை முழுவதுமாகப் படிக்க வேண்டும். தேர்வுத்தாளின் மார்ஜின் பகுதிக்குப் போதிய இடம் கொடுக்கவும்.

எழுதும் ஒவ்வொரு வார்த்தைக்கும் வாக்கியத்துக்கும் இடையில் போதிய இடைவெளி விடவும்.
கேள்வியின் எண்ணை எழுதும் விடைக்கு முன்பு தெளிவாகக் குறிப்பிடவும்.

எழுதும் விடைகளில் உள்ள முக்கியமான விவரங்களை அடிக்கோடிட்டுக் காட்டவும். கேள்விக்கான சரியான பதிலை எழுதவும், அதற்கு அப்பாற்பட்ட விஷயங்கள் திருத்துபவரின் மனோநிலையை மாற்றக் கூடும்.
முக்கியத் தலைப்புகளையும், துணைத் தலைப்புகளையும் தெளிவாக எழுதிக் கோடிட்டு வித்தியாசம் காட்டவும்.
நன்கு தெரிந்த விடைகளை முதலில் எழுதவும்.
முடிந்தவரையில் கையெழுத்து நன்றாகப் புரியும்படி எழுத முயற்சி செய்யவும்.

தேர்வின் இறுதி நிமிடங்களில் அதிகம் எழுத வேண்டியிருந்தால் அவற்றைச் சுருக்கமாக தேவையானவற்றை மட்டும் ஒரு சில வரிகளில் எழுதிவிடவும்.

(சென்னைப் பல்கலைக்கழக உளவியல் துறையும் நாட்டு நலப் பணித் திட்டமும் வெளியிட்ட, "கடினமில்லாமல் கற்பது எப்ப
-டி...?' என்ற வெளியீட்டிலிருந்து)
நன்றி 

No comments:

Post a Comment