Friday 8 April 2011

உணவுப் பாதுகாப்புதான் தேசப்பாதுகாப்பு என்பதுகூடத் தெரியாதவர்களின் கையில் தேசம்.?



: அறுவடை யாருக்கு?

First Published : 08 Apr 2011 03:56:16 AM IST

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை முன்கூட்டிய காலாண்டு மதிப்பீடு ஒன்று விவசாய அமைச்சகத்தால் வெளியிடப்படும். இந்த அறிக்கை, இந்தியாவின் உணவு உற்பத்தி நிலைமை, விளைச்சல், கையிருப்பு போன்ற விவரங்களை வெளிப்படுத்தும். இதன் அடிப்படையில்தான் அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி நிலவரம், தட்டுப்பாடு ஏற்படும் என்று கருதப்பட்டால் அந்த உணவுப் பொருள்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாட்டில் கொள்முதல் செய்து இறக்குமதி செய்வது என்றெல்லாம் மத்திய அரசு முடிவெடுக்கும்.
 இந்த ஆண்டுக்கான உற்பத்தி மதிப்பீட்டின்படி கோதுமை, அரிசி, பருப்பு வகைகள், பருத்தி, எண்ணெய் வித்துகள் என்று எல்லா பொருள்களுமே அபரிமிதமான உற்பத்தி அதிகரிப்பைக் காட்டி இருக்கின்றன. 2008-09-ம் ஆண்டுக்கான மொத்த உணவுப் பொருள்களின் உற்பத்தி 234.47 மி.ட. என்றால், இந்த ஆண்டில் அது 275.88 மி.ட.ஆக உயரும் என்கிறது அந்த அறிக்கை.
 ஏப்ரல் 1-ம் தேதி நிலவரப்படி, 15 மி.ட. கோதுமையும், 30 மி.ட. அரிசியும், மத்திய அரசின் கையிருப்பாக உள்ளது. அதாவது மொத்தம், 45 மில்லியன் டன். இதுவே கடந்த ஆண்டு 21.2 மி.ட.தான் என்கிறது அந்த அறிக்கை.
 விவசாய அமைச்சகத்தின் மூன்றாவது காலாண்டுக்கான முன்கூட்டிய மதிப்பீட்டின்படி, பருப்பு வகைகள் 17.3 மி.ட., எண்ணெய் வித்துகள் 30.2 மி.ட., பருத்தி 33.9 மில்லியன் பேல்கள் என்று அபரிமிதமான உற்பத்திப் பெருக்கம் இருப்பதாகக் குறிப்பிடுகிறது. அறிக்கையைப் படிக்கும்போது ஏற்பட்ட உற்சாகம், அறிக்கையை ஆராய்ந்து பார்க்கும்போது சட்டென வற்றி விடுகிறது.
 ஒவ்வொரு பொருளின் உற்பத்தி இலக்கையும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான விளைச்சலையும், இப்போதைய முன்கூட்டிய மதிப்பீட்டையும் பார்க்கும்போது உற்சாகம் தரும்படியாக இல்லை என்பதுதான் உண்மை. உணவுப் பொருள்களின் உற்பத்தி மதிப்பீடான 235.9 மி.ட. என்பது 2008-09-ன் 234.5 மி.ட. உற்பத்தியைவிட சற்று அதிகம் அவ்வளவே. திட்டமிடப்பட்ட இலக்கான 244.5 மி.ட.னைவிடக் குறைவாகத்தான் உற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறது.
 சொல்லப்போனால், அரிசி, எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள் போன்றவை திட்டமிடப்பட்ட இலக்கைவிட 10% குறைவாகத்தான் உற்பத்தியாகும் போலிருக்கிறது. 2008-09-ல் அரிசி உற்பத்தி அதுவரை இல்லாத அளவுக்கு 99.2 மி.ட.ஆக உயர்ந்தது. அந்த இலக்கை இந்த ஆண்டுக்கான உற்பத்தி எட்டும் என்று தோன்றவில்லை. அறிக்கையின்படி அதைவிடக் குறைவாகவேதான் உற்பத்தி காட்டப்பட்டிருக்கிறது.
 கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள்தொகை மூன்றரைக் கோடி அதிகரித்திருக்கிறது. அதேநேரத்தில் தனிநபருக்கான உணவு விகிதம் குறைந்திருக்கிறது. உலகளாவிய அளவில் காணப்படும் விலைவாசி ஏற்றம், அதிகரித்த பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை, தட்பவெப்ப நிலையில் காணப்படும் மாறுதல்கள், டாலரின் மதிப்புச் சரிவு என்று பல்வேறு அம்சங்கள் இந்தியாவின் விலைவாசியைப் பாதிக்கிறது. அதனால், மூன்றாவது காலாண்டுக்கான முன்கூட்டிய உற்பத்தி மதிப்பீட்டில் காணப்படும் அதிகரித்த உற்பத்தி எந்த விதத்திலும் விலைவாசியைக் கட்டுக்குக் கொண்டு வரவோ, உணவுப் பொருள்களின் விலையைக் குறைக்கவோ பயன்படாது.
 முதலாவது காலாண்டுக்கான மதிப்பீட்டின்படி இந்த ஆண்டுக்கான கரும்பு உற்பத்தி 324.912 மி.ட. என்று கருதப்பட்டது. இரண்டாவது காலாண்டில் அது 336.698 மி.ட.ஆக அதிகரிக்கப்பட்டது. இப்போது மூன்றாவது காலாண்டு மதிப்பீட்டின்படி அதுவே 340.545 மி.ட.ஆக, மறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அதிகரித்த உற்பத்தி, அதிகரித்த சர்க்கரை உற்பத்திக்கு வழிகோலுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 அதற்குள் நமது மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார், சர்க்கரை ஏற்றுமதியைப் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டிருக்கிறார். அதிகமான உற்பத்தி என்று கூறப்பட்ட 2006-07-ல் (355 மி.ட.) இதேபோல கரும்பு உற்பத்தியைக் காரணம் காட்டி, சர்க்கரை ஏற்றுமதிக்குக் கண்ணை மூடிக்கொண்டு அவர் அனுமதி அளித்ததன் விளைவால்தான் இன்றுவரை சர்க்கரை விலை இறங்காமல் இருக்கிறது என்பதை யாரிடம் போய்ச் சொல்லி நாம் நியாயம் கேட்க முடியும்?
 கடந்த 2007 பிப்ரவரி முதல் கோதுமை ஏற்றுமதியும், 2008 ஏப்ரல் முதல் அரிசி ஏற்றுமதியும் தடை செய்யப்பட்டுள்ளது. இப்போதே நம்மிடம் இருக்கும் கையிருப்பு அதிகம் உள்ளதால், தடைகளை அகற்றி, தேவைக்கு அதிகமான உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்ய வழிகோல வேண்டும் என்பது உணவு அமைச்சர் சரத் பவாரின் கோரிக்கை.
 அளவுக்கதிகமான உற்பத்தி ஏற்படும்போது அதைப் பாதுகாக்க நம்மிடம் போதுமான கிடங்குகள் இல்லையென்பதும், அதனால் உணவு தானியங்கள் வீணாகின்றன என்பதும் உண்மைதான். உச்ச நீதிமன்றம் தலையிட்டு, தேவைக்கு அதிகமாக இருக்கும், வீணாகும் உணவு தானியங்களை ஏழைகளுக்காவது விநியோகம் செய்யக் கூடாதா என்று கேட்டதும் நிஜம். அதற்காக சேமிப்பில் கவனம் செலுத்தாமல் ஏற்றுமதி செய்ய அனுமதித்துவிட்டுத் தட்டுப்பாடு வந்தால், அப்பாவி மக்களைப் பட்டினி போடுவதுதான் அரசுக்கு அழகா?
 காஷ்மீரையும் கன்னியாகுமரியையும் இணைத்து விவசாய நிலங்களை அழித்து இந்தியாவைச் சுற்றித் தங்க நாற்கரச் சாலை அமைக்க முடிகிறது. ஏழை, பணக்காரர் என்று தேவைக்கு ஏற்பத் தரப்படாமல் டி.வி., பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர், ஆடு, மாடு என்று இலவசங்கள் என்கிற பெயரால் அரசு கஜானாவைச் சூறையாடி வாக்குகள் வாங்க முடிகிறது. ஆனால், நமது ஆட்சியாளர்களால் உற்பத்தியாகும் விளைபொருள்களைப் பத்திரமாகப் பாதுகாக்க உணவுக் கிடங்குகளையும், முறையாக விநியோகம் செய்ய அமைப்புகளையும் உருவாக்க முடியவில்லை. நன்றாக இருக்கிறது இவர்கள் நாடாளும் லட்சணம்.
 உணவுப் பாதுகாப்புதான் தேசப்பாதுகாப்பு என்பதுகூடத் தெரியாதவர்களின் கையில் தேசம். அமோகமான விளைச்சல் விவசாயிக்கு, ஆனால், அறுவடை என்னவோ அரசியல்வாதிக்கு...
நன்றி @தலையங்கம்

 

No comments:

Post a Comment