உணவுப் பொருட்களின் விலை மலைப் போல ஏறிவிட்டது. காரணம் என்னவென்றுக் கேட்டால், ஆளும் அரசுகள் கூறும் காரணம், அதே புளிச்ச மாவுக் கதைத் தான். பெற்ரோல் எண்ணெய் விலை ஏறிவிட்டதாம், உணவுப் பொருட்களை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்லும் வாகனங்கள் கூலிஅதிகமாகிவிட்டதாம். இது போதாது என்று வானிலை சரியில்லாமல் உற்பத்தி சரிந்துவிட்டதாம்.
உண்மையில் அரசுகள் வானிலை மேலே பழியைப் போட்டு விட்டு கமுக்கமாய் இருக்கின்றனவா? ஒரு காலத்தில் உணவுப் பொருட்களின் விலை யேற்றம் இப்படியாக இருந்தது இல்லையே ! ஒரு இடத்தில் பெருமழை வந்தால் இன்னொரு இடத்தினை அது பாதிப்பது இல்லையே !
ஆனால் இன்று ஆஸ்திரேலியாவில் மழை வந்தால் உலகம் முழுதும் உணவுத் தட்டுப்பாடு ஆகிவிடுகிறது. இதற்கு என்னக் காரணம். உள்ளூர் சரக்குகளை கொள்ளவிலைக்கு வெளிநாடுகளுக்கு விற்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து கொள்ளை விலைக்கு வாங்கி நம் தலையில் கட்ட வேண்டும். இடையில் மாமா வேலைப் பார்ப்பவர்களுக்கு நல்ல வசூல். எத்தனை அரசுகள், எத்தனை கோடித் திட்டங்கள், எத்தனை எத்தனை மாநாடுகள் என நடத்தியும் உணவுப் பற்றாக்குறையை நீக்கவும் முடியவில்லை. உணவு விலையேற்றத்தை தடுக்கவும் முடியவில்லை. நாம் என்ன ஆஸ்திரேலியா கோதுமையைத் தான் தின்னுவேன் என்று இந்த அரசுகளிடம் மன்றாடினோமா ! ஆயிரம் ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்தார்களே ஆந்திராவில், அதைப் பற்றிக் கூட கவலைப்படவில்லை இந்த அரசுகள். உற்பத்தி செய்வதை அருகருகே உள்ள இடங்களுக்கு பகிர்ந்து உண்ட காலத்தில் இப்படி பிரச்சனைகள் வரவில்லையே ! உற்பத்தி பொய்க்கும் பட்ச்சத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்கினோம், இன்று வேண்டும் என்றே உள்ளூர் உற்பத்திகளை அழித்துவிட்டு கொள்ளை விலைக்கு வெளிநாடுகளை எதிர்ப்பார்த்து வாழவேண்டிய அவசியத்தை யார் உருவாக்கியது.
மக்கள் தொகை 700 கோடியைத் தொடப்போகிறது. என்றுமே இல்லாத அளவுக்கு உலகம் முழுதும் வேலை இல்லாத் திண்டாட்டம். 8 கோடி மக்களுக்கு ஒரு வேளை உணவும் கிடைக்க முடியாத சூழல். இந்த சூழலில் விவசாயம் மானியங்கள் குறைக்கப்படுகின்றது. தேவை இல்லாத தொழில்களுக்கு ஊக்கம் தருகின்றனர். நகர் புறத்து குடும்பங்கள் பல அன்றாட உணவு வாங்கவும் முடியாமல் தவிக்கின்றன. பல அரசுகள் இதைப் பற்றிக் கவலைப்படாது இலவச எலக்றானிக் பொருட்களைத் தருகின்றன, தேவையே இல்லாத திட்டங்களில் பணத்தை முதலீடு செய்து வல்லரசுக் கனவுகளோடு பறக்கின்றன. ஒரு தனி மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. அப்படித்தான் எகிப்தில் கலகங்கள் வெடித்தன. நாம் அந்தளவுக்கு எல்லாம் போராடப் போவதில்லை, ஏனென்றால் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகள் வந்து விட்டன அல்லவா.
உணவுப் பற்றாக்குறையை தவிர்ப்பது எப்படி? ஏன் நான் நூற்றுக்கணக்காக செலவு செய்து வெங்காயமும், தக்காளியும் வாங்க வேண்டும். எனக்கு என்று ஒரு அரசு உள்ளது, வளமான நாடு உள்ளது. எனக்கென்ன தலையெழுத்தா யார் யாரோ செய்யும் தவறுக்களுக்கு நான் பலிக்கடாவா. நீங்கள் செய்யும் அரசியல் வியாபாரத்துக்கு தொட்டுக் கொள்ள நாங்கள் என்ன ஊறுகாயா?
எழுத்து -அங்கிதா வர்மா
You might also like: